ஜியோவின் வருகைக்கு பின் தொலைத்தொடர்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன, அன்று வரை கொடிக்கட்டிப் பறந்த நிறுவனங்களின் சேவைகளுக்கு ஜியோ முற்றுப்புள்ளி வைத்தது. குறிப்பாக ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களின் திட்டங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தினர் எனினும் ஜியோவின் திட்டங்களுக்கும், சலுகைகளும் ஈடு கொடுக்க முடியவில்லை.

மேலும் ஏர்செல் போன்ற நிறுவனங்கள் ஜியோவுடனான போட்டியை சமாளிக்க முடியாமல் மூடப்பட்டன. அடுத்து இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஐடியா மற்றும் வோடாபோன் நிறுவனங்கள் ‘வோடாபோன் ஐடியா’ என்று பெயர் மாற்றம் பெற்று தங்களின் வாடிக்கையாளர்களுக்கு சேவையினை வழங்கிவருகின்றன.

இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் தனது வாடிக்கையாளர்களை இழக்காமல் இன்று வரை ஜியோவின் போட்டியை சமாளித்து தனது சேவையை சிறப்பாக செய்து வருகிறது. எனினும் பிஎஸ்என்எல் நிறுவனத்தினிடமும் ஒரு குறை இருந்தது, அது தான் 4ஜி சேவை. மற்ற நிறுவனங்கள் எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்னரே 4ஜி சேவையை அறிமுகப்படுத்தினர் ஆனால் பிஎஸ்என்எல் அதற்கான முயற்சிகளை எடுக்கவில்லை. பின் மக்களின் வேண்டுகோளை ஏற்று தற்போது பிஎஸ்என்எல் 4ஜி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.

இதனை வேலூரில் மத்திய தொலை தொடர்புத்துறை (பிஎஸ்என்எல்) அலுவலகத்தின் பொதுமேலாளர் வெங்கட் ராமன் உறுதிப்படுத்தி உள்ளார். மேலும் செய்தியாளர் சந்திப்பில் அவர் கூறியதாவது வேலூர் மாவட்டத்தில் வரும் ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்என்எல் தனது 4ஜி சேவையை துவங்கவுள்ளது என்றும், அதன் பிறகு இந்த 4ஜி சேவையானது, சேலம் மற்றும் கோவையில் துவங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

கூடுதலாக வேலூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இதற்காக புதிய கோபுரங்களை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு போட்டியாக தனது சேவையை மேம்படுத்த முடியும் என்று பிஎஸ்என்எல் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

இப்பொழுது உங்களுக்கு ஒரு சந்தேகம் எழலாம், அது என்ன 4G என்று. பார்ப்போம்

நான்காம் தலைமுறை சேவை அதாவது 4G 2008 ஆம் ஆண்டுகளில் தொடங்கப்பட்டது, இச்சேவை பரவலாக பல்வேறு நாடுகளில் விரிவுப்படுத்தப்பட்டு வருகின்றது, இந்த சேவை இணையம் சார்ந்த பயன்பாட்டிற்கு ஏற்ற வாகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சேவையில் அழைப்புகள், உயர் வேக வாய்ஸ் டேட்டா, வீடியோ கால் மற்றும் இணையம் ஆகியவற்றை பயன்படுத்திக்கொள்ளமுடியும்.

மேலும் இது மூன்றாம் தலைமுறை சேவை அதாவது 3G யை விட 10 மடங்கு வேகமானது மற்றும் விரைவானது.

4G சேவை பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு புதிது ஆனால் ஏற்கெனவே மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இந்தியாவில் அறிமுகம் செய்து, இதனை ஒவ்வொரு பகுதிகளுக்காக விரிவுப் படுத்தி வருகின்றன. பார்ப்போம் பிஎஸ்என்எல் 4G சேவையில் என்னென்ன திட்டங்களை கொண்டு வருகின்றது என்று.

மேலும் இந்த கட்டுரை உங்களுக்கு உதவிருக்கும் என்று நம்புகிறேன், நீங்கள் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட எந்தவொரு கேள்வியும் இருந்தால், அல்லது வேறு ஏதாவது நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பினாலும் கருத்து தெரிவிக்கலாம். உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்