கடந்த வியாழக்கிழமை அன்று கோலாலம்பூரில் நடந்த நிகழ்ச்சியில் கேலக்ஸி A9 (2018) என்ற ஸ்மார்ட்போனை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதன் மிகப்பெரிய சிறப்பம்சமாக உலகின் முதல் நான்கு கேமராக்களை பின்புறத்தில் கொண்ட ஸ்மார்ட்போனாக இது உள்ளது. மேலும் கேலக்ஸி A9 னின் முன் புறத்தில் உள்ள ஒரு கேமராவையும் சேர்த்தால் மொத்தம் ஐந்து கேமராக்கள் இதில் உள்ளன.

இதன் வடிவமைப்பில் எந்த மாற்றமும் இல்லை, பிற சாம்சங் ஸ்மார்ட்போன்களில் இருக்கும் வசதிகளே பெரும்பாலும் இதிலும் உள்ளன. கேலக்ஸி A9 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டது மேலும் இதில் 512 GB வரை மெமரி கார்டை பயன்படுத்தி நினைவகத்தை விரிவாக்கம் செய்து கொள்ள முடியும். கேலக்ஸி A9 ஸ்மார்ட்போனில் 6 GB ரேம் மற்றும் 8 GB ரேம் என இரண்டு வேரியன்ட்கள் உள்ளன. இது ஆண்ட்ராய்ட் 8.0 ஓரியோ மாடலுடன் வருகிறது.

பின்புற கேமராவிற்கு அருகிலேயே பிங்கர்பிரின்ட் சென்சார் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. முன்புற கேமராவின் திறன் 24 மெகாபிக்ஸல். மேலும் இதில் பேஸ்லாக் தொழில்நுட்பமும் உள்ளது.

6.3 இன்ச் 19:9 டிஸ்ப்ளே மற்றும் இதில் பிராசஸர் Qualcomm Snapdragon 660 இடம் பெற்றுள்ளது. இதில் sAMOLED வகை திரையைப் பயன்படுத்தியிருக்கிறது சாம்சங். இதன் மூலம் IPS வகை திரைகளை விட சிறப்பான காட்சி அனுபவத்தைப் பெற முடியும். மேலும் இது 3800 mAh பேட்டரி வசதியினை கொண்டது. இதன் விலை ரூபாய் 51,000 லிருந்து தொடங்குகிறது. இந்த போன் வரும் நவம்பர் முதல் இந்தியாவில் விற்பனைக்கு வரும் என அறிவித்துள்ளது சாம்சங்.

எல்லாம் சரி எதற்காக இந்த நான்கு கேமராக்கள், பார்ப்போம்.

இதில் பின்புறம் உள்ள நான்கு கேமராக்களும் ஒன்றின் கீழ் ஒன்றாக வரிசையாகக் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருக்கும் ஒவ்வொரு லென்ஸ்களும் அதெற்கென தனி சிறப்பினை கொண்டுள்ளன.

முதலில் அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ். இது அதிக அளவிலான பரப்பை கவர் செய்ய உதவுகிறது. இதன் திறன் 8 மெகாபிக்ஸல். இரண்டாவது டெலிபோட்டோ லென்ஸ் இதன் திறன் 10 மெகாபிக்ஸல், இதில் உள்ள 2X ஆப்டிகல் ஜூம் மூலமாகத் தொலைவில் இருக்கும் பொருள்களை எளிதாக ஜூம் செய்ய முடியும். மூன்றாவதாக இருப்பது மொபைலின் மெயின் கேமரா இதன் திறன் 24 மெகாபிக்ஸல், அடுத்து நான்காவதாக இருக்கும் கேமரா Depth எபெக்ட்களுக்காக பயன்படுத்தப்படுகிறது இதன் திறன் 5 மெகாபிக்ஸல்.

இந்த நான்கு கேமராக்கள் மூலமாக DSLR கேமராக்களை விட சிறப்பான போட்டோக்களை எடுக்க முடியும் என்கிறது சாம்சங்.

உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள்